கிராம மக்கள் ஒன்று கூடி 2,000 மரக்கன்றுகள் நடவு! மற்ற கிராமங்களுக்கு முன்னோடி!
அன்னுார் அருகே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, 2 ஆயிரம் மரக்கன்றுகள் (Saplings) நட்டு அசத்தினர். இந்த பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது. மழையளவு குறைந்து விட்டது. செம்மாணி செட்டிபாளையம், குருக்கம்பாளையம் உள்ளிட்ட குளங்களில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. இதனால் செம்மாணி செட்டிபாளையம் கிராம மக்கள், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கனவு காணும் இளைஞர் மன்றத்தினர், நேரு இளைஞர் மன்றத்தினர் இணைந்து ஊர் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.இந்த ஊர் கூட்டத்தில், நம் பகுதியை பசுமையாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து செம்மாணி செட்டிபாளையத்தில் உள்ள 16 ஏக்கர் குளத்தின் ஒரு பகுதியில், 'மியாவாக்கி (Miyawaki)' எனப்படும் குறுங்காடு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒன்று கூடி கிராம மக்கள்:
குளத்தில் 200 அடிக்கு, 150 அடி நீள அகலத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மூலம், 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. தாவர கழிவுகள், மக்கும் குப்பைகள் மற்றும் தோண்டப்பட்ட இடத்தில் இருந்த மண்ணையும் நன்கு பிரட்டி கலந்து அழுத்திச் சமன்படுத்தினர். அதன் பிறகு, மூன்று அடி இடைவெளியில்,
ஒன்றரை அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
ஒரு வரிசைக்கு, 48 மரக்கன்று என, 42 வரிசைகள் அமைக்கப்பட்டது.
நேற்று அனைத்து வீடுகளில் இருந்தும், 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை, ஊர் கருப்பராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, குடங்களில் தண்ணீருடன் குளத்துக்கு சென்றனர். அங்கு, 2016 குழிகளிலும் மரக்கன்றுகளை
(Saplings) நட்டனர்.
கலாம் மன்ற நிர்வாகிகள் கூறியது
இந்த ஊராட்சியில்,
20 ஆயிரம் மரக்கன்றுகளும்,
இந்த கிராமத்தில் மட்டும் 4 ஆயிரம் மரக்கன்றுகளும் நட உள்ளோம். அடுத்ததாக அப்புச்சிமார் குளம் மற்றும் குருக்கம்பாளையம் குளத்தில் மரக்கன்றுகள் நட உள்ளோம். இந்தக் குளத்தில் ஏற்கனவே இளைஞர்களால் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
குளத்தை சுற்றி உயிர் வேலி அமைக்க உள்ளோம். இப்பகுதியில் கால்நடை (Livestock) வளர்ப்போரிடம் 'இந்தக் குளத்தில் கால்நடைகள் மேய்க்க வேண்டாம்' என, அறிவுறுத்தி உள்ளோம்.
இங்கு 10 பேர் பராமரிப்பு பணி செய்ய உள்ளனர். இங்கு, சொர்க்கமரம், சிறு நெல்லி, பெரு நெல்லி, பலா, பூவரசன், நாவல், திருவோடு, சீனி புளியங்காய், சீதாப்பழம், வேம்பு, வில்வம், செண்பகப்பூ, சப்போட்டா, இலந்தை என, 25 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் பட்டாம்பூச்சியை
(Butterfly) ஈர்க்கும் தேள்கொடுக்கு மரம் நடப்பட்டுள்ளது. காக்கை, குருவிகளை ஈர்க்கும் மரங்களும் நடப்பட்டுள்ளன. பசுமை வனத்தால், இங்கே மழை அளவு அதிகரிக்கும். இப்பகுதியின் வெப்பமான சூழ்நிலை மாறும். சுற்றுச்சூழல் மேம்படும். நிலத்தடி நீர்மட்டம்
(Ground water level) உயரும். கால்நடை வளர்ப்புக்கு உதவும். இங்கு அதிக அளவில் பறவைகள் வரும்போது, அவற்றின் எச்சங்கள் மூலம் மேலும், அதிக இடங்களில் மரங்கள் வளரும் வாய்ப்பு உள்ளது.
மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் பங்கேற்ற, 300 பேருடைய பெயரை எழுதி, அதில் மூவரை தேர்வு செய்து, அவர்களுக்கு பட்டுப் புடவைகள் வழங்கினர்.
No comments:
Post a Comment